திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு இன்று காலை 8.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸிபிரஸ் விமானம் புறப்பட்டது. இதில் மொத்தமாக 105 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:17 மணியளவில் பாதுகாப்புடன் விமானம் வந்து சேர்ந்தது.
இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கிடையில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார். விமானத்தின் மேலாண்மை அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் மீண்டும் விமானம் புறப்பட்டு செல்லும் என விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.







