உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த கணவர், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த மோனிகா (22) என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு மனைவி மோனிகாவை
அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், கணவன் மீது காவல் நிலையத்தில் மோனிகா
புகார் அளித்துள்ளார். பின்னர், காவல் நிலையத்துக்கு வந்த பாலகிருஷ்ணன்
இனிமேல் மது அருந்தி வீட்டுக்கு வரமாட்டேன் என கூறி, செய்த தவறுக்கு
மன்னிப்புக் கேட்டு, தன் மனைவியுடன் ஒழுக்கமாக வாழ்கிறேன் என காவல்
நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், வீட்டுக்குச் சென்றவுடன் மீண்டும் மது அருந்திவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதால், மோனிகா தன் தாய் வீட்டிற்கு மூன்று வயது குழந்தையுடன் சென்றுவிட்டார். அதன் பின் பாலகிருஷ்ணன் மோனிகா மற்றும் அவரது தம்பியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு மோனிகாவையும் அவரது கும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி பேசியதால், மனமுடைந்த மோனிகா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் பாலகிருஷ்ணன் தன் முதல் மனைவி மோனிகா இறந்துவிட்டதாகக் கூறி
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி மற்றொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது
திருமணம் செய்துள்ளார். அந்த திருமண போட்டோவை தன்னுடைய முகநூலில்
பதிவிட்டுள்ளார். இந்தக் கண்ணீர் அஞ்சலி போட்டோ மற்றும் இரண்டாவது திருமணம்
செய்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோனிகா தன் கணவர் மீது
நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்டம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிரேசி சோபியா பாய் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், இரண்டாவது
திருமணம் செய்துள்ள பாலகிருஷ்ணனை அழைத்து விசாரணை செய்து எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வந்துள்ளது.
இது சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்
மோனிகா, உயிருடன் இருக்கும் என்னை இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து
ஒட்டி இரண்டாவது திருமணம் செய்துள்ள கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்க உள்ளார். இச்சம்பவம் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கிரேசி சோபியா பாய் மீது
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல காவல் தலைவர் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








