மேட்டுப்பாளையம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் வணங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜி.எம்.ஆர்.சி அரசு உதவிப்பெறும் நடுநிலைப் பள்ளி கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகரத்தில் துவங்கப்பட்ட முதல் அரசு உதவிபெறும் பள்ளியான இந்த பள்ளியில் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். அப்படி 1980ம் ஆண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் இன்று 50 வயதைக் கடந்த நிலையில் ஒன்றாக சந்திக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
இதில் தற்போது இங்கு கல்வி பயின்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 90 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிப் படிப்பினை முடித்து பிரிந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களின் தோழமைகளைச் சந்தித்த பெண்கள், ஆண்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்து ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களின் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தங்களின் வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை கற்றுத் தந்த ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து கௌரவித்ததுடன் அவர்களின் காலில் நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொருவரும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.







