அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 60 இடங்களில் சோதனை நடத்தி 13 லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 24 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மீண்டும் கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அவருடன் தொடர்புடைய 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 57 இடங்களிலும் கேரளாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி வேலுமணி அவரது குடும்பத்தினருடன் ஹாங்காங், மலேசியா உட்பட பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வதற்காக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த அதிமுகவினர், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர் மாவட்டம் குமரன் சாலையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் உறவினருக்கு சொந்தமான, ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் செயல்பட்டுவரும் மகாகணபதி நகைக்கடையில் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், ஜீவா நகரில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குநர் துவாரகநாத் சிங் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தில் வசிக்கும் சந்திரகாந்தன், திருப்பூர் மாவட்டத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவந்த நிலையில் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த 5 பேர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்து கவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் 7 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், கந்தவேலுவின் வீட்டின் முன் திரண்டனர். கந்தவேல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், அவரிடம் உள்ள சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.