அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

தாராபுரத்தில் அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விவசாயி மற்றும் 2 குடோன் காப்பாளர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமார்…

தாராபுரத்தில் அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விவசாயி மற்றும் 2 குடோன் காப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமார் என்ற விவசாயி, எஸ்.பி.ஐ வங்கியில் கடந்த ஆண்டு 1,850 நெல் மூட்டைகளை அடமானமாக வைத்து 18 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த நெல் மூட்டைகள் தாராபுரம் தட்சன்புதூர் ரோட்டில் சுந்தரம் என்பவரது குடோனில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த குடோனை கண்காணிக்க எஸ்.சுரேஷ்குமார் மற்றும் எம்.சுரேஷ் குமார் ஆகிய இருவரை என்.சி.எம்.எல். நிறுவனம் நியமித்துள்ளது.

இந்தநிலையில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 1,850 நெல் மூட்டைகளை விவசாயி ராஜ்குமார் மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் இணைந்து திருடி விற்பனை செய்துள்ளனர். இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் வங்கி அதிகாரிகள் நெல் குடோனை ஆய்வு செய்தபோது நெல் மூட்டைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நெல் மூட்டைகளை திருடிய 3 பேரையும் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து விவசாயி ராஜ்குமார், எஸ்.சுரேஷ்குமார் மற்றும் எம்.சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.