ஆசிரியர் தினம் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ஆசிரியர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு..க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!

நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!

அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஆசிரியர் தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவ அறிஞருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

“ஆசிரியர்கள் நாட்டிலேயே சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும்.”
— டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

ஒரு ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுத் தருபவர் அல்லர்; அறிவை வழங்கி, சிந்தனையை வளர்த்து, ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் விதைத்து, ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை உருவாக்குபவர்.

இந்த ஆசிரியர் தினத்தில், என் வாழ்வின் முதல் ஆசிரியரும், தமிழாசிரியருமான என் தந்தையாரை நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறேன்.

என் தந்தையார் உள்ளிட்ட, தங்கள் அறிவையும் அனுபவத்தையும் அர்ப்பணித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்நாளில் எனது இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் :

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவை அள்ளித் தருவதோடு, ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தந்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இந்நாளில், கல்விப் பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள அனைத்து ஆசிரியர்களையும் போற்றி வணங்குவோம். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், வழிகாட்டுதலும் வெற்றிக்கு என்றும் அடித்தளமாக அமையட்டும், மாணவர்களின் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் :

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் அனைவரின் வாழ்க்கைப் பாதையில் அறிவொளி ஏற்றி, கனவுகளை நோக்கிப் பயணிக்க வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் போற்றும் சிறப்புமிக்க நாளாக இது திகழ்கிறது.

பாடங்களை மட்டுமல்ல, வாழ்க்கையையும் கற்றுத் தந்து, அறிவை விதைத்து, நம்பிக்கையை வளர்த்து, தலைமுறைகளை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்”!இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

டிடிவி தினகரன் :

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.

மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.