தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒரு போதும் மூடப்படாது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா ஆகியோர் தெரிவித்தனர்.
1976 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் நோக்கில் தொடங்கப்பட்டது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகமாகும். தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிய வந்த தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு, மருத்துவமனை மற்றும் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் என பல நலத்திட்டங்களைத தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் செய்துவருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் வனத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலைமையில் தொழிற்சங்க தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டி அளித்த வனத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா கூறுகையில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது என உறுதியளித்தனர்.
அத்துடன் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. ஒருபோதும் அவர்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது எனவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தர அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆ ராசா தெரிவித்தார்.







