முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவே வரி உயர்வு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் சென்னை எம்.ஆர்.சி.நகரில் நடத்தப்பட்டது. இதில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிர்வாகத்துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, இயக்குநர் பொன்னையா, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 126 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணையும், 71 பேருக்கு நிதியுதவியையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சில இடங்களில் வரி கட்டாமல் உள்ளனர். அனைவருக்கும் ஒரே நிலையில் சொத்து வரி வசூலிக்கவும், முறையற்ற நிர்வாகத்தை, முறைப்படுத்தவும் வரி உயர்வு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்து வரியினை 10 அல்லது 15 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்துவது சரியாக இருக்காது என்பதற்காகவே, ஆண்டுதோறும் உயர்த்திக் கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தனக்கான நிதி தேவையை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விலைவாசி உயர்வுக்கோ, யாரையும் சங்கடப்படுத்தவோ கொண்டுவரப்படவில்லை. இந்தியாவிலேயே சொத்து வரி குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்மா உணவகத்தை முன்பு இருந்ததை விட, சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அம்மா உணவக பணியாளர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை எனவும், அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினால் அது சரி செய்யப்படும் எனவும் கூறினார்.
Advertisement: