கர்நாடகாவில் மதமாற்றத்தை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்றத் தடை மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா இதனை தெரிவித்துள்ளார். இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த அவர், அதுவரை தற்போதுள்ள அவசரச் சட்டம் அமலில் இருக்கும் என குறிப்பிட்டார்.
கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2021 என்ற பெயரிலான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் போன்றவற்றை அளிப்பதாக ஆசை காட்டி ஒருவரை மதம் மாற்றுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது. மேலும், கட்டாய மதமாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
அதோடு, மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Advertisement: