தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை டிஜிட்டல்மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல்மயமாக்கி, அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் நடைமுறை விரைவில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல்லுக்கு (RailTel) டாஸ்மாக் நிறுவனம் ரூ.294 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக்கின் செயல்பாடுகளை முழுவதும் கணினிமயமாக்கவும், வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கவும் ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்கித் தருவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளதாக ரயில்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டல்மயமாக்கும் பணி நிறைவடைய சுமார் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இப்போது, சில்லறை விற்பனை நிலையங்கள் வரை டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட உள்ளன.
முதன்மையாக இதன் மூலம் கள்ளச்சாராயச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது. அண்மைக் காலமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குவோரிடம் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.







