சேலத்தில் திரையரங்கில் டிக்கெட் வாங்கும் போது கட்டாயமாக பாப்கார்ன் வாங்க
வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாக பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சேலத்தைச் சேர்ந்த மோனிஷ் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் பொன்னியின்
செல்வன் திரைப்படம் பார்ப்பதற்காக சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். 15 டிக்கெட்கள் முன்பதிவு செய்த அவர் குடும்பத்தினரோடு திரையரங்குக்கு சென்றபோது, திரையரங்க டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்கள் 15 டிக்கெட்டிற்கும் 15 பாப்கான் பாக்கெட் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர்.
அதற்கு மோனிஷ் குமார் மறுப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆவேசம் அடைந்த திரையரங்கு ஊழியர்கள் மோனிஷ் குமாரிடம், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளவும், எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளவும், இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அலட்சியமாக பேசியுள்ளனர்.
மோனிஷ் குமார் இதனை வீடியோவாக பதிவு செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வாத்தியார் திரைப்படத்தில் தம்பி ராமையா வடிவேலுவிடம் மல்லிகைப்பூவை வலுக்கட்டாயமாக விற்கும் நகைச்சுவைக் காட்சி பலரையும் ரசிக்கும்படி செய்தது. இதே பாணியில், வாங்கிய டிக்கெட்டிற்கு ஏற்ப பாப்கார்னும் வாங்க வேண்டும் என ரசிகர்களை திரையரங்க ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவம் அமைந்திருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.








