சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் கண்கவர் தொடக்க விழாவில், தமிழர் பெருமை பறைசாற்றப்பட்டது.
44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இன்று தொடங்கியது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், தமிழ்நாட்டின் பழம்பெருமைகளை பறைசாற்றும் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர் நாகரீகம், கலாச்சாரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளிட்ட பழந்தமிழர் சாதனைகள், பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் மேற்கொண்டு வரும் கடல்வழி வாணிபம், தமிழ் மொழியின் பெருமை, தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள், ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் வீர விளையாட்டுக்கள், பரத நாட்டியம், நாட்டுப்புற கலைகள் என தமிழ் மண்ணின் பழம்பெருமை குறித்து விரிவாக காட்சிமொழியில் விளக்கப்பட்டது.
மிக விரிவாக அதேநேரத்தில் மிக நேர்த்தியாக இது காட்சிப்படுத்தப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரித்தான கம்பீரமான மொழி நடையில் ஆங்கிலத்தில் இதனை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரங்கம் முழுவதும் குழுமி இருந்த தேசிய, சர்வதேச பார்வையாளர்கள் தமிழ் மண்ணின் பெருமைகளை அறியும் வகையில் இது காட்சிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, என்ஜாயி என்சாமி என்ற திரையிசைப் பாடலுக்கான நடனம் அரங்கேற்றப்பட்டது.
பிரதமர் வருகைக்கு முன்பாகவும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், ஏ.ஆர். ரகுமானின் வந்தே மாதரம் பாடல் இசைக்குழுவினரால் இசைக்கப்பட்டது.
இதையடுத்து, குச்சுப்புடி, ஒடிசி, கதகளி, மோகினி ஆட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
டிஜிட்டல் மேடை அமைக்கப்பட்டிருந்ததால், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றார்போல் அரங்கம் பல்வேறு வண்ணங்களால் காட்சியளித்தது.
இதையடுத்து, திரையில் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஓவியங்கள் வரையப்பட்டன.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் காண்போர் கண்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இந்து பத்திரிகையின் என். ராம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பிரபலங்கள் பங்கேற்றனர்.









