சதுரங்க போட்டிக்கும் தமிழ்நாட்டிற்கும் வரலாற்று சிறப்புமிக்க தொடர்பு இருப்பதாகவும், கடவுள் சதுரங்கம் விளையாடிய இடம் தமிழ்நாடு என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாபலிபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் எனக் கூறி தனது உரையை தொடங்கினார்.
சதுரங்க உலகின் மிகப்பெரிய கவுரமாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக சதுரங்க போட்டிகளின் பிறப்பிடமான இந்தியாவில் நடைபெறுவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இந்த பெருமை கிடைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துள்ளதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பியாட் தீப பேரணி நடைபெற்றதை குறிப்பிட்ட பிரதமர் மோடி,, அது இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பியாட்டிலிருந்து தொடங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் நாட்டின் முக்கியமான 75 நகரங்களில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வலம் வந்து இளைஞர்களிடையே சதுரங்கப் போட்டி குறித்த ஊக்கம் ஏற்படுத்தப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
விருந்தாளிகளை கடவுள் போல் பாவிப்பர்கள் இந்தியர்கள் எனக் கூறிய பிரதமர் மோடி, விருந்தோம்பலின் சிறப்பு குறித்து திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒன்றையும் படித்துக்காட்டினார். ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு” என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெரிவி்த்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி அதற்கான அர்த்தத்தையும் கூறினார். அந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் செஸ் ஒலிம்பியாட்டிற்காக இந்தியா வந்துள்ள விருந்தினர்களை உபசரிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நடத்த தமிழ்நாடு மிகப் பொருத்தமான இடம் எனக் கூறிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கும் சதுரங்க போட்டிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தொடர்புகள் இருப்பதாக தெரிவித்தார். பூவனூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோயிலின் தல வரலாற்றை அவர் மேற்கோள்காட்டினார். இளவரசியுடன் கடவுள் சதுரங்கம் விளையாடியதாக அந்த கோயிலின் தல புராணம் கூறுவதையும் மோடி சுட்டிக்காட்டினார். விளையாட்டிற்கும் தெய்வீகத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துரைக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பல்வேறு விளையாட்டுக்களை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
விளையாட்டு உலகை ஒன்றிணைப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்து நின்றபோது அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல்வேறு சர்வதேச விளையாட்டு தொடர்கள் உதவியதாக கூறினார். விளையாட்டில் தோல்வி அடைபவர்கள் என்று யாரும் கிடையாது எனக் கூறிய பிரதமர் மோடி,வெற்றியாளர்கள், எதிர்கால வெற்றியாளர்கள்தான் விளையாட்டில் உண்டு எனக் கூறினார்.








