அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் பதவியேற்க உள்ள நிர்வாகத்தில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றி காண்போம்.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே, இந்திய வம்சாவளியினருக்கு தனது நிர்வாகத்தில் முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என, ஜோ பைடன் கூறியிருந்தார். அதன்படி அவருடைய நிர்வாக பணிக்குழுவில் 13 பெண்கள் உட்பட சுமார் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளனர். ஜோ பைடனின் கொரானா நோய்தொற்று தடுப்பு பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செலின் கவுண்டர் இடம் பெற்றுள்ளார். இப்பிரிவின் ஆலோசகராக விடூர் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜோ பைடனின் நிர்வாக பணிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டோர் அடங்கிய பட்டியலில் வெள்ளை மாளிகை மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக நீரா டாண்டன், அமெரிக்க மருத்துவ இயக்குநராக டாக்டர் விவேக் மூர்த்தி , நீதித்துறையில் அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலராக உஸ்ரா ஜியா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகையின் பொருளாதார கவுன்சிலில் அமெரிக்க வாழ் இந்தியரான பாரத் ராமமூர்த்தி துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை வகுப்பாளராக மாலா அதிகா, டிஜிட்டல் பிரிவின் இயக்குநராக கரிமா வர்மா, துணை பத்திரிகை செயலராக சப்ரினா சிங் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப பிரிவு மூத்த இயக்குநராக தருண் சாப்ரா, தெற்காசிய பிரிவு விவகாரங்களுக்கு சுமனா குகா, பருவநிலை குறித்த கொள்கை வகுப்பில் மூத்த ஆலோசகராக சோனியா அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் அதிபரின் தனிப்பிரிவில் பணியாற்றிய கவுதம் ராகவன் மீண்டும் ஜோ பைடனின் நிர்வாகத்திலும் இடம் பெறுகிறார். அதிபரின் பத்திரிக்கை செய்தி வெளியீடு பிரிவில் வினய் ரெட்டி மற்றும் வேதாந்த் பாட்டீல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் திட்டமிடலில் ஆயிசா சா , தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக சமீரா பாசில், அதே போல் நேகா குப்தா மற்றும் ரீமா சா ஆகியோர் வெள்ளை மாளிகையின் நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒருங்கிணைப்பாளராக சாந்தி களத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.