குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 2ம் தேதி தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் குடியரசுத்தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கின்றனர். அன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், அங்கு நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். இதையடுத்து உதகையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதனிடையே, குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு தலைமைச்செயலக வளாகத்தில் புதிய சாலை அமைக்கும் பணிகள், தூய்மைப்படுத்துதல், அலங்காரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, குடியரசுத் தலைவர் வருகை மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைமைச்செயலக வளாகத்தில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடற்கரை சாலையில் மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயந்திர கழிவுகளால் ஆன படகுடன் இருக்கும் மீனவர், விவசாயி உள்ளிட்ட சிற்பங்கள் காரணமாக கடற்கரை சாலை பொலிவுடன் காட்சியளிக்கிறது.