முக்கியச் செய்திகள் தமிழகம்

இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

இனி மின் தடை இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.

தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், சென்னை மாவட்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபுவும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட உடன் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தான் வலியுறுத்தினார்.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், நிதி இழப்பு, சுய உற்பத்தி குறைவானது ஏன்? என்பதெல்லாம் ஆய்வு செய்து, மின்மிகை மாநிலமாக மாற்றப் பாடுபட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். யார் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தாலும், உடனடியாக இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் கூடாது என்றும் மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர்,  “கொரோனாவையே ஒரு மாதத்தில் விரட்டும் போது, ஏன் மின்சார வாரிய பராமரிப்பு பணிகளை உடனடியாக முடிக்க முடியாது?  98% மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். எஞ்சிய சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்றி, துறையை மேம்படுத்த உழைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். 

மேலும், மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெறும் வகையில் நம் செயல்பாடு அமைய வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள், இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம் என்றும், இனி மின் தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் உறுதியளித்தார். 

Advertisement:
SHARE

Related posts

ஒருதலைக் காதல்: மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொன்றவர் கைது

Gayathri Venkatesan

பத்ம விபூஷன் விருதுபெற்ற சோலி சொராப்ஜி கொரோனாவால் மரணம்: பிரதமர் இரங்கல்

Halley karthi

உச்சத்தில் சமையல் எண்ணெய் விலை!