ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது – தமிழ்நாடு அரசு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.