மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 2029 ம் ஆண்டு முதல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான 106-வது அரசியலமைப்பு திருத்த மசோதா குறித்து, நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, நாடாளுமன்ற மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையை மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து, நடைபெற்ற டிவிஷன் வாக்கெடுப்பில், மொத்தம் 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். அதில் ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர். பகுதிவாரி வாக்கெடுப்பில் மக்களவையில் மொத்தம் 543 எம்.பிக்களில் 333 எம்.பிக்கள் பட்டன் மூலமாக வாக்களித்துள்ளனர். மசோதாக்களை அறிமுகம் செய்ய தேவையான எம்.பிக்கள் ஆதரவு கிடைத்ததையடுத்து, 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மேலும், எந்த விதிமீறலும் இல்லாமல் எம்பிக்கள் தங்கள் கருத்துகளை கூற வேண்டும், மசோதா தவிர வேறு எதைப்பற்றியும் பேசக்கூடாது. ஒவ்வொரு கட்சி எம்பிக்களுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கப்படுகிறதோ அவ்வளவு நேரத்திற்குட்பட்டு தான் பேச வேண்டும். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.







