கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து ஸ்மிருதி இரானி நடனமாடி வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பரப்புரைக்காக தமிழகம் வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்ருமிதி இரானி இன்று மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டோவில் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பரப்புரையின் போது இந்தி பாடலுக்கு தாண்டியா நடனம் ஆடி வாக்கு சேகரித்தார் ஸ்மிருதி இரானி . இவருடன் வானதி சீனிவாசனும், பாஜகவின் பெண் நிர்வாகிகளும் நடனமாடினர். சுற்றியிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். தற்போது ஸ்ருமிதி இரானி தாண்டியா நடனம் ஆடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







