திமுக அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகளின் எண்ணிக்கை ; முதலமைச்சர் ஸ்டாலினுக்கே…. – அண்ணாமலை கடும் விமர்சனம்

திமுக அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 500 க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவற்றுள் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றபடவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லை.

கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார்.

இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம். போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.