இடைத்தேர்தல்கள் அரசியல் வரலாற்றை புரட்டி போட்டக் காலத்தையும், அது ஆளுங்கட்சியின் புகழ்பாடுவதற்கான ஒரு சம்பிரதாயம் என விமர்சிக்கப்பட்ட காலத்தையும் மாறி மாறி பார்த்துவந்துள்ள தமிழ்நாடு, மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இடைத்தேர்தல்கள் தேவையா என்கிற அதிருப்தி குரல்கள் எழும் தமிழகத்தில்தான் அதனை ஒரு திருவிழா போல் எதிர்நோக்கும் சூழலும் நிலவுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் முதல் இடைத்தேர்தலான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உ ள்ளது. இந்த நேரத்தில் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்கள் எப்படி இருந்தன என்பதை உற்றுநோக்கி அலசுவோம்.
சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்ற பிறகு கடந்த கடந்த 71 ஆண்டுகளில் சட்டமன்றம், நாடாளுமன்ற மக்களவை ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 120க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் சுமார் 39 சதவீதம் அதவாது 47 இடைத் தேர்தல்களை கடந்த 17 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்துள்ளது. இந்த 120க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல்களில் 71 தேர்தல்களில் அதாவது சுமார் 58 சதவீத தேர்தல்களில் ஆளுங்கட்சியோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோதான் வெற்றி பெற்றுள்ளன. 42 சதவீத இடைத் தேர்தல்களிலேயே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிகளின் கையே பெரும்பாலும் ஓங்கியிருந்துள்ளது என்பதை இந்த புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டினாலும், இடைத் தேர்தல்களின் முடிவுகள் உணர்த்திய செய்திகளின் அடிப்படையில் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1) அடுத்து வரப்போகும் ஆட்சி மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்திய இடைத் தேர்தல்கள்
2) எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்று பலத்தை நிரூபித்த இடைத் தேர்தல்கள்
3) இடைத் தேர்தல்கள் என்றால் ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்கிற தோற்றத்தை உருவாக்கிய இடைத் தேர்தல்கள்
ஆட்சி மாற்றத்தை உணர்த்திய இடைத் தேர்தல்கள்
===================================================
திருவண்ணாமலை தொகுதி இடைத் தேர்தல்
தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் அதனை திருவண்ணாமலை இடைத் தேர்தல் மூலம் ஆட்டம் காண வைத்தது திமுக. 1952, 1957ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த பெருமிதத்தோடு ஆட்சிக்கட்டிலில் காங்கிரஸ் அமர்ந்திருந்த நேரம் அது. திருவண்ணாமலை தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழனிப்பிள்ளை உயிரிழந்தைதையடுத்து 1963ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில், பத்ராசலம் என்பவர் களம் இறக்கப்பட்டார். திமுக சார்பில் ப.உ சண்முகம் போட்டியிட்டார். திமுக நன்கு வளர்ந்து வருவதை உணர்ந்திருந்த காமராஜர், அக்கட்சியை குறைத்து மதிப்பிடாமல் காங்கிரசின் வெற்றிக்காக தீவிரக் களப் பணியாற்றினார்.
தனது அமைச்சரவை சகாக்களுடன் திருவண்ணாமலை தொகுதியில் 10 நாட்கள் முகாமிட்டு தீவிர பரப்புரையில் காமராஜர் ஈடுபட்டார். இலவச கல்வித் திட்டம், சத்துணவு திட்டம், புதிதாக கட்டப்பட்ட அணைக்கட்டுக்கள் என தமது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். ஆனால் தேர்தல் முடிவு என்னவோ திமுகவிற்குதான் சாதகமாக அமைந்தன. “காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது” , “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என அண்ணா முழங்கிய வாசகங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தன.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களும் அந்த காலக்கட்டத்தில் தலை தூக்கியிருந்த நிலையில், அந்த விஷயத்தையும் தேர்தல் பரப்புரையில் பிரதானமாக எடுத்துவைத்தது திமுக. “இந்தியை மத்திய அரசு திணிக்கிறது…. மெல்லத் தமிழ் இனி சாகும்” என அண்ணா எச்சரித்தது திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களை எழுச்சிகொள்ள வைத்தது. மொழிவாரி மாநில பிரிவினையின்போது வடவாற்காடு மாவட்டத்தின் சித்தூர் உள்ளிட்ட பகுதிகள் ஆந்திராவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தநிலையில் அந்த பிரச்னைகளையும் தேர்தல் பரப்புரைகளில் திமுக சுட்டிக்காட்டியது.
எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருவண்ணாமலை தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த இடைத் தேர்தல் திமுக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் பத்ராசலத்தைவிட திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம், 1475 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்ட காங்கிரஸ், 1967ம் சட்டமன்ற தேர்தலில் கோட்டையையே கோட்டைவிட்டது. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. திருவண்ணாமலை தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை மாநிலமெங்கும் பொதுக் கூட்டங்கள் நடத்தி கொண்டாடிய திமுக, காங்கிரசின் செல்வாக்கு இனி தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்பதை திருவண்ணாமலை தொகுதி இடைத் தேர்தல் உணர்த்திவிட்டதாக முழக்கமிட்டது. 1963ம் ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் எதிர்க்கட்சியான திமுகவை ஆளுங்கட்சியாக்குவதற்கு வித்திட்ட ஒரு தேர்தலாக அமைந்தது.
திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல்
தமிழக அரசியல் வரலாற்றின் அடையாளப்படுத்தும் சின்னங்களில் ஒன்றான, அதிமுகவை 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி கட்டிலில் அமர்த்திய சின்னமான இரட்டை துளிர்த்தது 1973ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தலின்போதுதான். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ந்தேதி அதிமுகவை தொடங்கி தமிழக அரசியல் வரலாற்றின் புதிய சகாப்தத்தை எழுதினார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய 6 மாதத்தில் இடைத் தேர்தலை அதிமுக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக எம்.பி.யாக இருந்த ராஜாங்கம் காலமானதையடுத்து அங்கு இடைத் தேர்தல் அறிக்கப்பட்டது. அந்த களத்தை பயன்படுத்தி தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். சினிமா மூலம் அடைந்த புகழையும், செல்வாக்கையும் திமுகவின் பலத்தை நிரூபிக்க பல தேர்தல்களில் பயன்படுத்திய எம்.ஜி.ஆருக்கு முதன் முறையாக அக்கட்சிக்கு எதிராக தனது பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் மாறுபட்ட தேர்தல் களமாக திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல் அமைந்தது.
நான்கு முனைப்போட்டி நிலவிய, அந்த இடைத் தேர்தலில், திமுக சார்பில் பொன்.முத்துராமலிங்கம் களம் இறக்கப்பட்டார். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தனும், இந்திரா காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமியும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞரான மாயத் தேவரை களம் இறக்கினார் எம்.ஜி.ஆர். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த அதிமுக, சுயேட்சைகளுக்கான சின்னங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் இருந்தது. அப்போது மாயத்தேவர் தேர்ந்தெடுத்த சின்னம்தான் இரட்டை இலை. இந்த சின்னத்தில் போட்டியிட எம்.ஜி.ஆரும் அனுமதி கொடுத்தார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியே பெரும்பாலும் வெற்றிபெறும் என்கிற பிம்பத்தை உடைத்த இந்த தேர்தல் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளியது. ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் இரண்டாம் இடைத்தை பிடித்தார். அவரைவிட 1,41,792 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் மாயத் தேவர் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு 2,60,824 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் பதிவான வாக்குகளில் இது 52 சதவீதம். இந்த பிரம்மாண்ட வெற்றி தமிழ்நாடு அரசியலில் எம்.ஜி.ஆர் என்கிற சக்தி விஸ்வரூபம் எடுத்திருப்பதையும், அவர் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறப்போகிற காலம் நெருங்கிவிட்டதையும் உணர்த்தின. திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல் வெளிப்படுத்திய இந்த செய்தியை நிரூபிக்கும் வகையில் 1977ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அமைந்தன. அந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 1977ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக எம்.ஜி.ஆர். அரியணை ஏறினார்.
மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத் தேர்தல்
1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததற்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை முக்கிய காரணம் என்கிற பார்வை ஒருபுறம் இருந்தாலும், அதற்கு முன்பே ஆளுங்கட்சியான திமுகவிற்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுக இரண்டு முக்கிய தேர்தல் வெற்றிகளை பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னரும் அவரது செல்வாக்கும், அவர் சுட்டிக்காட்டிய இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கும் குறையவில்லை, ஜெயலலிதா என்கிற புதிய அரசியல் சகாப்தம் தமிழக அரசியலில் எழுதப்பட்டு வருகிறது என்பதை அந்த இரண்டு தேர்தல்களின் முடிவுகள் சுட்டிக்காட்டின. ஒன்று மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல், மற்றொன்று 1989ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல். குறிப்பாக 13 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட்டோம் என்ற கருணாநிதியின் நிம்மதியை இரண்டு மாதங்களிலேயே குலைத்ததன மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற தொகுதிகுகளின் இடைத்தேர்தல் முடிவுகள். 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 232 இடங்களிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளில் தொழில்நுட்பக் காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா தலைமையிலும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலும் இரண்டு அணிகளாக பிரிந்து இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக அமோக வெற்றிபெற்று 150 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அந்த மகிழ்ச்சி அடுத்த இரண்டு மாதங்களில் ஆட்டம் கண்டது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் பிப்ரவரி மாதம் ஜெயலலிதா தலைமையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தது இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது. இந்நிலையில் மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் மார்ச் 11ந்தேதி நடைபெற்றது. அந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று திமுகவிற்கு அதிர்ச்சி அளித்தது. மருங்காபுரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்னுசாமி திமுக வேட்பாளர் செங்குட்டுவனைவிட 11 ஆயிரத்து 23 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராதா திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரைய்யாவைவிட 13,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரம் இந்த தொகுதிகளில் பண பலத்தை அதிமுக அதிகம் களம் இறக்கி வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழவும் தவறவில்லை. குறிப்பாக மருங்காபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக அதிக விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இடைத் தேர்தல்களில் அதிகம் பேசு பொருளான திருமங்கலம் பார்முலாவுக்கு முன்னோடியாக மருங்காபுரி பார்முலா உள்ளது என்கிற விமர்சனமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுவதுண்டு.
எதிர்க்கட்சிகள் பலத்தை நிரூபித்த இடைத் தேர்தல்கள்
========================================================
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்க்கட்சிகளும், சுயேட்சைகளும் தங்கள் பலத்தை நிரூபித்து ஆளுங்கட்சிக்கு சவால்விடுத்த இடைத் தேர்தல்கள் பலவற்றையும் தமிழ்நாடு அரசியல் சந்தித்துள்ளது. இது 2000மாவது ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் இவை அதிக அளவிலும், 2000மாவது ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் மிகக் குறைவாகம் நிகழ்ந்துள்ளன. 1962ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடித்தாலும் அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காலங்களில் 1957 முதல் 1962 வரை 5 ஆண்டுகளில் 7 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்து சுயேட்சைகள் வெற்றிபெற்றனர்.1971ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தாலும் அதற்கு முன்பு ஆளுங்கட்சியாக இருந்தபோது, 1967ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு காலத்தில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 4ல்தான் திமுக வென்றது. 3ல் எதிர்க்கட்சிகள்தான் வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆர் மிகுந்த செல்வாக்கோடு இருந்த சமயத்தில் அவரது ஆட்சிகாலத்தில் 1984 முதல் 1987 வரை நடைபெற்ற 6 இடைத் தேர்தல்களில் 4ல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றாலும் 2 தொகுதிகளில் எதிர்க்கட்சியான திமுக வெற்றியை ருசித்தது. 2000மாவது ஆண்டுக்கு பின்னர்தான் எதிர்க்கட்சிகள் இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது அரிதாகிப்போனது.
ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்கிற தோற்றத்தை உருவாக்கிய இடைதேர்தல்கள்
======================================================================================
இடைத் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்கிற தோற்றத்தை உருவாக்கியதில் 2001ம் ஆண்டுக்கும் 2016ம்ஆண்டுக்கும் இடைப்பட்ட 16 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. இந்த காலத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 29 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 28 தொகுதிகளில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகளான கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல்கள் உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டம் அது. ஆளுங்கட்சியாக இருக்கும்போது வரும் இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய கவுரவப் பிரச்சனையாக பார்க்கப்பட்டன. இடைத் தேர்தல்கள் திருவிழாக்கோலம் பூண்டது இந்த காலக்கட்டத்தில்தான். இடைத் தேர்தல்களை சந்திக்கும் வாக்காளர்களை அதிர்ஷ்டசாலிகளாகவும், கொடுத்துவைத்தவர்களாகவும் சித்தரித்து கேலிச்சித்திரங்கள் போடும் அளவிற்கு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பெருட்கள் விநியோகம் தொடர்பான புகார்கள் வியாபித்து இருந்தன. 2001ம் ஆண்டு முதல் 2006 வரையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சரப்பாக்கம், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், மங்களூர், சாத்தான்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மங்களூர் தொகுதியில் மட்டுமே எதிர்க்கட்சியான திமுக வெற்றி பெற்றது. மற்ற 7 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுகவே வெற்றி பெற்றது. கும்மிடிப்பூண்டி பார்முலா என்று வர்ணித்து விமர்சிக்கப்படும் அளவிற்கு ஆளுங்கட்சியான அதிமுக மீது பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்தன. 7 இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்றிருந்தாலும் அடுத்தவந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களை கைப்பற்றியது. 96 இடங்களில் வென்றிருந்த திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தியது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றபோது மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. கடந்த அதிமுக ஆட்சிக்கு போட்டியாக இந்த முறை இடைத் தேர்தல்களில் வெற்றிகளை குவித்தது திமுக. மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருமங்கலம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், கம்பம், திருச்செந்தூர், வந்தவாசி, பெண்ணாகரம் ஆகிய 11 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இந்த 11 தொகுதிகளில் 7 தொகுதிகள் தென் மண்டலத்தில் வருவதால், அப்போது தென்மண்டல திமுகவை வழிநடத்திக்கொண்டிருந்த மு.க.அழகிரிக்கு அதிக வேலை இருந்தது. கட்சித் தலைமையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்த 7 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்தார் மு.க.அழகிரி. குறிப்பாக திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிக்காக அவர் கடைபிடித்ததாகக் கூறப்படும் யுக்திகள் திருமங்கலம் பார்முலா என இடைத்தேர்தல் வரலாற்றில் மிகவும் பிரபலமானது. திருவிழாக்கோலம் பூண்டிருந்த திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கறிவிருந்து, பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம், என களைகட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இப்படி 11 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் வெற்றி வாகை சூடியதை திமுக மார்தட்டிகொண்டாலும் அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தை அதனால் தடுக்க முடியவில்லை. 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 10 தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். திருச்சிராப்பள்ளி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஆலந்தூர், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் என 10 தொகுதிகளிலும் வெற்றிகளை அள்ளியது அதிமுக. இப்படி இடைத் தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்கிற நிலை 2017ம் ஆண்டிலிருந்து சற்று மாறத் தொடங்கியது. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற அரசியல் ஆளுமைகள் அடுத்தடுத்து மறைந்த பின்னர் தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கின. இடைத் தேர்தல்களில் எப்படி வேண்டுமானாலும் டிவிஸ்ட் நடக்கலாம் என்பதை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் உணர்த்தியது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவையும், எதிர்க்கட்சியான திமுகவையும் வீழ்த்தி, சுயேட்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் அது தங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது அமைச்சரவை சகாக்களுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
டிடிவி தினகரனை எதிர்க்க வலுவான வேட்பாளர் வேண்டும் என்பதால் கட்சியின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனனை களம் இறக்கினர். எனினும் டிடிவி தினகரன் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை. மதுசூதனனைவிட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகமாக பெற்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவானார் டிடிவி தினகரன். எனினும் அவரது வெற்றியிலும் பணப்பட்டுவாடா சர்ச்சைகள் வலுவாகவே எழுந்தன. 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பணம் தருவதாக கூறி வாக்காளர்களை ஏமாற்றி ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதாக அதிமுக, திமுக என பிற கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ஒவ்வொரு முறையும் இடைத் தேர்தல்களின்போதும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறப்பட்டாலும், இது போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆர்.கே.நகர் பார்முலா என்கிற வார்த்தை 2017ம் ஆண்டு முதல் இடைத் தேர்தல் வரலாற்றின் விமர்சனங்களில் ஒன்றாக சேர்ந்தது.
அதன் பின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்.எல்.ஏக்களின் தொகுதிகள் உள்ளபட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்குமா என்கிற மிகப்பெரிய கேள்விக்கு 22 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளில்தான் விடைதெரியும் என்பதால், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைவிட இந்த இடைத் தேர்தல்களின் முடிவுகள்தான் அதிகம் உற்றுநோக்கப்பட்டன. இடைத் தேர்தல்கள் என்றால் ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்கிற சூத்திரத்தை இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உடைத்தெறிந்தது.
22தொகுகளில் 13 தொகுதிகளை கைப்பற்றியது. அதே நேரம் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை அதிமுக தக்கவைத்தது திமுகவிற்கு ஏமாற்றமாக அமைந்தது. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது இபிஎஸ்க்கும் ஓபிஎஸ்க்கும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. 2019ம் ஆண்டு பணப் பட்டுவாடா புகாரால் தள்ளி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற நிலையில் அதிலும் திமுக வெற்றி பெற்றது. இப்படி தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விக்கிரவாண்டி, நான்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் உற்சாகமூட்டின. அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. அதே நேரம் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலோடு நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிந்தைய கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி என்பது ஆளுங்கட்சி கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே இவ்வாறு மாறிமாறி வந்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாட்டில் முதல் இடைத் தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக்கட்சியான காங்கிரசை களம் இறக்கியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிபூசல் நிலவும் நிலையில் நடைபெற உள்ள இந்த இடைத் தேர்தல் என்ன செய்தியை சொல்லப்போகிறது?, என்ன பார்முலாவை உருவாக்கப்போகிறது?…எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை உணர்த்தும் தேர்தலாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-எஸ்.இலட்சுமணன்