சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு தலைமையேற்க குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி படத்திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தலைமையேற்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு டெல்லியில் நேரில் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு கண்ட வளர்ச்சி குறித்த “The Dravidian Model” புத்தகத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
ஏற்கெனவே கடந்த வாரம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை குடியரசு தலைவரிடம் முன்வைத்ததோடு, ஆகஸ்ட்2ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்ச்சிக்கு வருமாறு வாய்மொழியாக அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








