கூகுள் மீட் வீடியோ ஆப்பின் இணையதளத்திற்கான பிரத்யேக செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய செயலியை, கணினி, லேப்டாப், மேக்புக் ஆகியவற்றில், பதிவிறக்கம் எதுவுமின்றி எளிதாக பயன்படுத்தலாம். Progressive Web Application என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், கூகுள் மீட் ஆப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இது முழுக்க முழுக்க இணையதள இயங்குதளத்தில் மட்டுமே செயல்படக் கூடியது.
அந்த வகையில் கூகுள் மீட் செயலியை பயன்படுத்த, இனி நாம் ஜி-மெயில் மின்னஞ்ச லுக்குள் செல்லத் தேவையில்லை. மேலும், இணையத்தில் URL எதையும் டைப் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதாவது, கூகுள் மீட் போன்றே இது செயல்படக் கூடியது என, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அலுவலக ஆலோசனைக்கான பணிகளை மேலும் எளிதாக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கூகுள் குரோம் 73-ல் இந்த செயலி சிறப்பாக செயல்படும் என்றும், அந்த வகையில் விண்டோஸ், லைனெக்ஸ் உள்ளிட்டவற்றில் சிறப்பான பயன்பாட்டைத் தரும் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலியை meet.google.com இணையதளத்திற்கு சென்று, நீங்கள் நேரடியாக விர்ச்சுவல் மீட்டிங்கை நடத்திக் கொள்ளலாம்.








