கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிம்.ஸ்ரீ. திட்டத்தை தவெக எதிர்ப்பது தொடர்பாக பேசிய அவர், “கொள்கை முடிவை அரசியல் போல பேசுவது சரி அல்ல. இப்படி எல்லாம் செய்ததால் தான் மக்கள் திமுக அரசை புறக்கணித்தார்கள்.
திமுக கூட்டணி கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக தான் விஜய் எதிர்க்க வேண்டும் என நினைக்கிறார். நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது நடக்கவில்லை. ஆனால் தேர்தலில் திமுக தோற்கப்படிக்கப்பட வேண்டும் என்பது நடந்து உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து சானாதானம் பற்றிய ஆதவ் அர்ஜுனா, முஸ்தபா ஆகியோர் பேச்சு குறித்து அவர், “சனாதனம் குறித்து பேசுவதை விஜய் கண்டிக்க வேண்டும். கிட்னி திருட்டு குறித்து விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும் என்ற தகவல் வந்து உள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த பிரச்சனைகள் இரட்டைப்படை ஆகி விட்டதோ என்ற அச்சம் இருக்கிறது. முதலமைச்சர் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் இருப்பது மகிழ்ச்சி. புதியவர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், “மழை தூறும் என நினைத்தோம்.. சுனாமியே வந்து விட்டது. இந்த தோல்வி வெற்றி பெறக் கூடிய தோல்வி என எடுத்துக் கொள்ளலாம். செப்புத் தகடுகள் குறித்து விஜய் செப்பி இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இறுதியாக “அண்ணாமலை மீண்டும் மாநில தலைவர் ஆக போகிறாரா..?” என்ற கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் கை கூப்பி கும்பிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரனை நீக்கிவிட்டு மீண்டும் அண்ணாமலையை மாநில தலைவராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.







