இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான் எனவும், தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக முதலமைச்சர் கலந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது;
4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழ் நாகரீகம். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது தமிழருக்கு குருதி போன்றது. தமிழ் நமக்கு மொழியாக மட்டுமல்லாமல் உயிராக, போராட்டத்தின் போது வாளாக உள்ளது. தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழவைக்கும். மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடியாக உள்ளனர். கணிக்க முடியாத தொன்மையான வரலாற்றை கொண்டதாக தமிழும், தமிழ் இனமும் உள்ளது. படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது. இதற்கு சான்றாக கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளன.
நாட்டிலேயே அதிக கல்வெட்டுகளை கொண்டதாக தமிழகம் திகழ்கிறது. அதிலும் மதுரையை சுற்றியுள்ள வைகை ஆறு, கீழடி பகுதிகளில் அதிக கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கரும்பொருநை பகுதியான தாமிரபரணி பகுதிகளில் கிடைத்த ஆய்வுகள் மூலம் 3100 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகமாக தமிழ் சமூகம் இருந்துள்ளது.
சிவகிரியில் நடந்த ஆய்வுகளின் மூலம் செங்கல் வடிகால் அமைப்பின் மூலம் நல்ல தண்ணீர் எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. மயிலாடும்பாறை பகுதியில் கண்டறிந்த ஆய்வு மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இரும்பை பயன்படுத்திய சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது தெரியவந்துள்ளது. இத்தகைய ஆய்வுகளின் முடிவின் மூலம் தமிழரின் வரலாறு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்து வருவதால்தான், இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாகத்தான் கல்வெட்டுகள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், கீழடியில் 18 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.எ.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







