தமிழ்த்தாய் வாழ்த்து-எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி ஊழியர்கள்; கனிமொழி எம்.பி கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில், “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்?” என திமுக…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில், “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்?” என திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி குடியரசு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஓரு பகுதியாக சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது.

ஆனால் சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மற்ற அலுவலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது” என்று சில அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி, “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?” என டிவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

https://twitter.com/SuVe4Madurai/status/1486264077169336330

அதேபோல, “RBI சென்னை தமிழகத்திற்குள் இல்லையா? 2021 டிச.17, அரசாணை தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கி குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை” என்று மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

https://twitter.com/Manothangaraj/status/1486283053634703360?t=rpzv4xLGJ7rTi4sMgvB6Fw&s=08

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மனோதங்கராஜ், ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு தனது கண்டனத்தையும், “தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும் இது போன்ற மனநிலையை ஒன்றிய அரசு அலுவலர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.