பொங்கல் பண்டிகை முடிவடைந்த 5-வது நாளில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணையாற்றங்கரையில் ஆண்டுதோறும் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் உள்ள உற்சவமூர்த்திகள் தென்பெண்ணையாற்றங்கரைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆற்றுத்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த பகுதிகளில் ஆற்றுத்திருவிழாவை ஒட்டி பல கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
https://x.com/EPSTamilNadu/status/2013279701700358178
அந்த வகையில், கோயில் அருகே வியாபாரி ஒருவர், ஹீலியம் கியாஸ் சிலிண்டர் மூலம் பலூனில் காற்று நிரப்பும் கடை அமைத்து பலூன் வியாபாரம் செய்து வந்தார். அப்போது, இரவு 7 மணி அளவில் 2 ஹீலியம் கியாஸ் சிலிண்டர்களில் ஒரு கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பாவுபட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி கலா (வயது 50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார், மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன். மறைந்தவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் அனைவரும் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை வேண்டுகிறேன். ஆற்றுத் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணநிதி உடனடியாக வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.







