திமுக அரசு அரசுப்பள்ளி மாணவர்களை பசியின் கோரப்பிடியில் சிக்க வைக்கத் துடிக்கிறதா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றொரு சான்று. ஊழியர் பற்றாக்குறையாலும், ஊழல் நிர்வாகத்தினாலும் தமிழக அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரம் ஏற்கனவே மிக மோசமானதாக இருக்கும் நிலையில், பணியில் உள்ள சத்துணவு ஊழியர்களின் இப்போராட்டம் ஏழை, எளிய மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும்.
https://x.com/NainarBJP/status/2013242198876373168
இடைநிலை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் எனத் தமிழகக் கல்வியமைப்பின் முக்கிய அச்சாணிகளைத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தெருவில் இறங்கிப் போராடும் பரிதாப நிலைக்குத் தள்ளிவிட்டு, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” எனத் திமுக அரசு விளம்பர விழா எடுப்பதில் யாருக்கு என்ன லாபம்? திமுக அரசின் ஆணவத்திற்கும் அலட்சியத்திற்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை அடகுவைக்க வேண்டுமா?
எனவே, தமிழகப் பிள்ளைகள் தன்னை ‘அப்பா’ என்றழைக்க வேண்டுமென அத்தனை ஆசைப்படும் முதல்வர், அப்பிள்ளைகள் பசியில் வாடுவதை வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடாது. சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து, அவர்கள் தொடரவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும்”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.







