தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 2026-இல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஆளும் கட்சியான திமுக, கடந்த ஓராண்டுக்கு முன்னரே பூத் கமி்ட்டி அமைத்தல், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நிகழ்வுகள், உடன்பிறப்பே வா என கட்சியினரை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
மேலும், கட்சியில் ஒருங்கிணைப்புக்கான குழுவும் அமைக்கப்பட்டது. தற்போது கனிமொழி எம்.பி தலைமையில்தேர்தல் அறிக்கை தயாரி்ப்புக் குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜன.20) மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணி தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், இதுதவிர மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







