தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன்

நான் தமிழச்சி, விவேகானந்தரை பின்பற்றுபவள் அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம். இவர்களைப் புண்படுத்துவதை மீறி பண்படுத்த வேண்டும் என்றால் பேசலாம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் “உலக சகோதரத்துவ தின விழா” நிகழ்ச்சி…

நான் தமிழச்சி, விவேகானந்தரை பின்பற்றுபவள் அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம். இவர்களைப் புண்படுத்துவதை மீறி பண்படுத்த வேண்டும் என்றால் பேசலாம்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் “உலக சகோதரத்துவ தின விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய கருத்துக்கள் எங்கெல்லாம் பரப்பப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த ராமசாமி இருப்பார். ஏனென்றால் ராமசாமி என்றாலே ஏதோ தேசியத்திற்கு சம்பந்தமில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ராமசாமிகளால் தான் தேசியம் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

சகோதரத்துவத்தை, ஒற்றுமையை 1893 ஆம் ஆண்டிலேயே ஒற்றுமை யாத்திரையை நடத்தி விவேகானந்தர் உலகிற்கு உணர்த்தியுள்ளார். ஆனால் சிலர் நித்திரையில் இருந்து விட்டு இன்று ஒற்றுமை யாத்திரை நடத்துகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையை சொல்லித் தருகிறேன் என்று நித்திரையில் இருப்பவர்கள் வேண்டுமானால் யாத்திரை செல்லலாம். நாம் விழித்திருப்பவர்கள் நமக்கு ஒற்றுமையை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

நம் மதம் மதித்தல்,சகிப்புத் தன்மையை சொல்லிக் கொடுத்திருக்கிறது, அதன்படி சகித்துக் கொண்டிருக்கிறோம்,அதோடு மற்ற மத கருத்துக்களை மதித்துக் கொண்டிருக்கிறோம். விநாயகர் அழுக்கில் இருந்து எடுக்கப்பட்டார் என்று சொல்வதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் . அது மட்டுமல்ல பெரும்பான்மையாக நாம் வணங்கும் ஒரு விழாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் அதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது குரலை உயர்த்திக் கொண்டே தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் பெரியாழ்வார் மண் பெரியார் மண்ணாக மட்டுமே முன்னிறுத்தப்பட்டு விடும். இன்று பேசப்படும் சமூக நீதி எல்லாம் ஆடம்பரத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தான் ஆனால் நாம் பேசும் சமூக நீதி ஆன்மாவிற்காக பேசப்பட்டது என்பதை விவேகானந்தர் சொல்கிறார்.

ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து விட்டால் நம்மால் ஒரு ஊசி செய்ய முடியுமா அதனால் ஆங்கிலேயன் இங்கேயே இருக்கட்டும் என சொன்னவர்கள் எல்லாம் இந்த நாட்டில் இருந்தார்கள் . ஆனால் ஆங்கிலேயரை விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல் தடுப்பூசி செய்து 150 நாடுகளுக்கு கொடுத்து இருக்கிறோம். ஆளுநர் இதையெல்லாம் பேசலாமா என்றால் பேசலாம் நான் தமிழச்சி, விவேகானந்தரை பின்பற்றுபவள் அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம். இவர்களைப் புண்படுத்துவதை மீறி பண்படுத்த வேண்டும் என்றால் பேசலாம்.

நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை இன்று நாம் கடலில் மிதக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து போர் ஆயுதங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த நாம் இன்று வெளிநாடுகளுக்கு போராயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்து இருக்கிறோம். விவேகானந்தர் போன்றோரின் கருத்துக்கள் இன்னும் அதிகமாக இளைஞர்களிடம் சென்று சேர வேண்டும்.
இன்றளவும் சகோதரத்துவத்தோடு தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் சுயநலத்திற்காக வேண்டுமென்றால் சிலர் நம்மை பிரித்து ஆள நினைக்கலாம். ஆனால் எங்களை யார் பிரித்தாலும் இந்த நாடு ஒற்றுமையான நாடு என்பதை நாம் இன்று உணர்த்திக் கொண்டிருக்கிறோம் என நிகழ்ச்சியில் பேசினார்.


இதனையடுத்து பத்திரிக்கையாளார்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் மேடையில் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்தார்: இங்கு ராமானுஜர் காலத்தில் இருந்தே சமூக நீதி பேசப்பட்டு வருகிறது ,பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடினார்கள். அதனால் எல்லோருக்குமே இதில் பங்கு இருக்கிறது,காமராஜர் அனைவருக்குமே கல்வியை கொடுத்தார். சகிப்புத்தன்மையும் பொறுத்துக் கொள்வதும் மாறுபட்ட கருத்தாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கிடைக்கும் கல்வி அரசாங்க பள்ளிகளில் முழுவதாக கிடைக்கிறதா?அனைத்து அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் அரசாங்க பள்ளிகளில் தான் படிக்கிறார்களா? சமச்சீர் கல்வி என்று பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சமச்சீர் கல்வி என்று தமிழ்நாட்டில் இருக்கிறதா ? நீட் தேர்வை மாணவர்கள் முழுவதுமாக எதிர் கொள்ளமுடிகிறதா? எனப் பல்வேறு கேள்விகளை அவர் முன் வைத்தார்.

30- 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய கல்விக் கொள்கை என்று 2-3 லட்சம் ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கல்விக் கொள்கை. எனவே அதைப்பற்றி உண்மையாக தெரிந்து கொண்டு அதை முன்னெடுத்துச் சென்றால் என்ன, தேசியம் என்ற வார்த்தை வந்தவுடன் தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது தவறு எனப் பேசினார்.

-பரசுராமன்.ப
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.