சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சினிமாவில் வரும் ஹீரோ போன்று இல்லாமல் சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.   மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து “மாமனிதன் வைகோ”…

சினிமாவில் வரும் ஹீரோ போன்று இல்லாமல் சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து “மாமனிதன் வைகோ” என்ற பெயரில் ஆவணப்படம் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். விழாவில் துரை.வைகோ, கே.எஸ்.அழகிரி, நல்லகண்ணு, திருமாவளவன், கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சத்யம் திரையரங்கில் பல சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில் பல ஹீரோக்களைப் பார்த்துள்ளோம்.  ஆனால் இன்று நடைபெறும்  நிகழ்ச்சியில், சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோவாக வைகோவை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

 

வைகோ ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ, லட்சிய ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ, எழுச்சிமிக்க ஹீரோ, உணர்ச்சி மிக்க ஹீரோ, போராளி ஹீரோ உயரத்தில் மட்டுமல்ல, கொள்கை, லட்சியம், தியாகத்திலும் உயர்ந்தவர் வைகோ என புகழாரம் சூட்டினார். மாணவரணியில் இருந்தபோது வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தியவன் நான். நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்.

 

பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். கருணாநிதி சொல்லியனுப்பினார் என்ற போது, படித்து பார்க்காமையிலேயே, தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் வைகோ. பிரச்சாரக்கூட்டங்கள், மாநாடுகளில் உணவு நேரத்தில் தான் பேசுவார் வைகோ. அப்போது தான் கூட்டம் கலையாது என கூறினார்.

வைகோவின் அரசியல் வாழ்வை பேச நேரமில்லை என்றும் அவரது வாழ்க்கையை பேசிக்கொண்டே செல்லலாம் என்றும் முதலமைச்சர் கூறினார். எழுச்சி, உணர்ச்சியுடன் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடமாக வைகோவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கித்தந்துள்ள துரை வைகோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார். கருணாநிதி உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த வைகோவை, கருப்புத்துண்டை வைத்து கருணாநிதி அடையாளம் கண்டுகொண்டார்.

 

கருணாநிதியிடம் உங்களுக்கு பக்கபலமாக இருந்தது போல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ கூறினார். அதேபோல், வைகோவுக்கு துணையாக நானும் இருப்பேன். அவரது உடல் நலன் எனக்கு மட்டும் இல்லை இந்த நாட்டுக்கே முக்கியம். அதனால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்லுங்கள் என கூறினேன். என் விருப்பத்தை கேட்டு கொண்டதற்கு வைகோவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.