அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.  அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழ்நாடு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற வாக்கிற்கு ஏற்றது போல், அதிமுக ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்களை, தான் ஆட்சிக்கு வந்தால் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவேன் எனக் கூறிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2006 ஆம் ஆண்டு, தான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தொகுப்பூதியத்தில் தங்களது வாழ்க்கையை தொலைத்திருந்த 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி ஒளி ஏற்றினார் என்பதை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைவராலும் பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை புத்தாண்டு தினத்தில் இன்று அறிவித்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் அரசு என்றைக்குமே திமுக அரசு தான் என்பதை மீண்டும் உணர்த்தி உள்ளார். பிறந்துள்ள புத்தாண்டில் முதல்வரின் பொற்கால ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் இனிப்பான செய்தியாக ஒன்றிய அரசிற்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு இன்று முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு 16 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொரோனா காலங்களில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11% மட்டுமே வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எவரும் எதிர்பாராத அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசிற்கு இணையாக 01.01.2022 முதல் 14% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் 3 லட்ச ரூபாய் குடும்ப நல நிதியை ஆட்சி பொறுப்பேற்றதும் கருணையுள்ளத்தோடு 5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இரத்து செய்து போராட்ட காலத்தை பணிக் காலமாக அறிவித்து அதற்குண்டான ஊதியத்தையையும் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

கடந்த காலங்களில் தனது நியாயமான கோரிக்கைக்காக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திய போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் தலைவர்களை குறைந்தபட்சம் அழைத்து கூட பேச மனமில்லாத முதல்வர் இருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர், திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து பின் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்தார்கள். மேலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை மதிக்கின்ற தமிழக முதல்வர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்தில் அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார்கள். மேலும் அவற்றை உற்றுநோக்கி அவற்றில் உள்ள நியாயத் தன்மையை உணர்ந்து உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! என மீண்டும் நிரூபிக்கும் வகையில் 01.01.2023 முதல் ஒன்றிய அரசுக்கு இணையாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியத்தாரர்களுக்கும் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர்கள் போன்றோரை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருதல், 171 தொழில்கல்வி ஆசிரியர்களின் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம், ஒன்றிய அரசு வழங்கியது போல் 01.07.2022 முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வையையும் அதன் நிலுவைத் தொகையையும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பையையும் மற்றும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் விரைவில் எங்களுக்கு வழங்குவார் என்ற அசைக்க முடியாத பெரும் நம்பிக்கையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு கு. தியாகராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.