இலங்கைக்கு தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ முன் வந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு பாஜக சார்பில் உணவு மற்றும் உடைகளை அவர் வழங்கினார். விடுதலைக்காக இந்திய தூதரகத்தின் மூலம் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்களிடம் தெரிவித்த அண்ணாமலை, விரைவில் அனைவரும் தாயகம் திரும்புவீர்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து, அவர், யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுடன் அண்ணாமலை கலந்துரையாடினார். அப்போது, இலங்கை – தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவரிடம் மீனவர்கள் எடுத்துரைத்தனர். இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, இலங்கைக்கு தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் உத முன் வந்துள்ளதாகக் கூறினார். மேலும் கடுமையான சட்டங்கள் மூலம் மீனவர் பிரச்சினையை அணுகினால் இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடும் சிரமத்திற்கு உள்ளான மக்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதியுடன், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் அங்கு வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இயன்ற அளவு நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!’
நன்கொடை வழங்க விரும்புவோர் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தின் இந்திய ஓவர்சிஸ் வங்கி கிளையின் சேமிப்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி எனக்குறிப்பிட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் நன்கொடை அளிப்பவர்களுக்கு, வருமான வரி விலக்கு பெறுவதறகான அதிகாரபூர்வ ரசீது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








