கோடை வெயிலின் உச்சமாக சொல்லப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், வயதானவர்கள் பகலில் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், மதுரை, நெல்லை, ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேலூர் மாவட்டத்தில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், குடை, தொப்பி உள்ளிட்ட முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில். இந்த மாதம் 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்றும், இயல்பை விட வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மாதங்களுக்கு மேல் சூரியனின் சூட்டை சமாளிக்க முடியாமல் வெந்து தணிந்த மக்கள், அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிப்பது என திணறி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்த்துவிட்டு, அதிகளவு தண்ணீர் மற்றும் குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டாலே கத்திரி வெயிலை சமாளிக்கலாம் என்பது பலரது ஆலோசனைகளாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.