காவல் துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த செயலைச் செய்தவர்கள் மீது ஏன் தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளதாவது: சென்னை மால்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இல்லாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் தான் பா.ஜ.க.வினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள்.
இந்த செயலை செய்தவர்களை காவல் துறை ஏன் கைது செய்யவில்லை ? பா.ஜ.க.வினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா ? ஏதோவொரு வகையில் காவல் துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல் துறையினர் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
– ம.பவித்ரா








