மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் நடந்த ஊழலலில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான அபிதா முகர்ஜியின் வீட்டில் மேலும் ரூ.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா சாட்டர்ஜி, கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து விசாரணையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் சி.பி.ஐயிடம் ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். அதேநேரத்தில் பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து கடந்த 23ந்தேதி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியார் அர்பிதா முகர்ஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அர்பிதா முகர்ஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்றும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவற்றை எண்ணி முடிக்கவே பல மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு வீட்டில் இருந்து 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடியாகும்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணம் அனைத்தையும் அர்பிதா, தான் தொடர்புடைய கம்பெனியில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக பணத்தை ஓரிரு நாளில் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் அர்பிதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.








