விளையாட்டுத் துறையின் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை, டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, நடப்பாண்டிற்கான கேல் ரத்னா, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது உள்ளிட்ட விருதுகளை பெறும் வீரர்கள் விபரங்களை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழக டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப் பதக்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதன் அடிப்படையில் சரத் கமல் இந்த விருதுக்கு தேர்வாகினார். இதேபோல், தமிழகத்தின் பிரக்ஞானந்தா, இளவேனில் வாளறிவன், ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. பல்வேறு விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், விளையாட்டுத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டைச் சார்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்யானந்தா, அர்ஜுனா விருதைப் பெற்றார். அர்ஜுனா விருதுக்கு தேர்வான மற்ற வீரர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.