பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கடந்த நவம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேசம் – தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான கலாசார உறவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்வின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு, நினைவு பரிசாக வீணையும் மயில் சின்னம் பொறித்த கேடயமும் பரிசளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மக்களின் இதயங்களில் காசி வாழ்வதை பிரதமர் மோடி நன்கறிவார் என்றார். மேலும் பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்வதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கு எடுத்துக்காட்டு தான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி என்று தெரிவித்தார். இதற்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய ஒற்றுமைக்கு ஒரு தொடக்கமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி திகழ்வதாக குறிப்பிட்டார். வருங்கால தலைமுறையினரிடம் தமிழ் மொழியை பரப்பும் வகையில் மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.