தோனிக்கு தமிழக தலைவர்கள் நெகிழ்ச்சி வாழ்த்து!

ஐபிஎல் வீரராக தோனி விடைபெறுவது குறித்து மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனி, ஐபிஎல் போட்டிகளில் வீரராக இருந்து விடைபெற்று, சிஎஸ்கே அணியின் வழிகாட்டி (Mentor) பொறுப்பை ஏற்கவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் தோனியைப் பாராட்டி உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

தோனி ஒரு உணர்வு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில்,

“தோனி சென்னைக்கு கோப்பைகளை விட அதிகமானவற்றைக் கொடுத்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து நம்மை ஒன்றிணைத்த ஓர் உணர்வையும், கிரிக்கெட்டைக் கடந்து ஒரு பிணைப்பையும் அவர் உருவாக்கியுள்ளார்.

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒருநாள் முடிவு உண்டு என்பது பழமொழி. தமிழகத்தின் அன்புக்குரிய வளர்ப்பு மகனான அவருக்கு, அவர் முழுமையாகத் தகுதியான பிரியாவிடையை வழங்குவதற்கான கடைசி ஒரு வாய்ப்பாவது கிடைத்திருக்கக் கூடாதா என்பதே எங்களது ஒரே ஏக்கம்.

எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்கள், மகத்தான வெற்றிகள் மற்றும் என்றும் நினைவில் நிற்கும் நினைவுகளைக் கொடுத்ததற்கு தோனிக்கு நன்றி. சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக உங்களது புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னையின் பெருமை தோனி – எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில்,

“சில ஜாம்பவான்கள் விளையாட்டைக் காட்டிலும் பெரியவர்கள். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான்தான் எம்.எஸ். தோனி. ஒரு கிரிக்கெட் வீரராக சென்னைக்கு வந்த அவர், தமிழகத்தின் வளர்ப்பு மகனாகவும், சென்னையின் பெருமையாகவும், லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்துகொள்ளும் ஓர் உணர்வாகவும் மாறினார்.

சேப்பாக்கத்தின் ‘அன்பு கோட்டை’ மைதானத்தின் ஆரவாரம் முதல் மஞ்சள் நிறத்தில் திரளும் ரசிகர்கள் கூட்டம் வரை, வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஏராளமான நினைவுகளை இந்த நகருக்கு அவர் வழங்கியுள்ளார். ராஞ்சிதான் அவர் பிறந்த இடமாக இருக்கலாம். ஆனால், சென்னை என்றென்றும் அவரது இல்லமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் வீரராக நீங்கள் விடைபெறலாம் மஹி. ஆனால், தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் நீங்கள் நீங்கா இடம் பிடித்திருப்பீர்கள்.

சிஎஸ்கே அணியின் வழிகாட்டி என்ற புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள். தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மேலும் பல நினைவுகளை உருவாக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கே ரசிகர்கள் இனி தவிப்பார்கள் – உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில்,

“ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளையும், மகிழ்ச்சியான தருணங்களையும் வழங்கிய ஒருவர், தற்போது களத்திலிருந்து விடைபெறுகிறார். தோனியின் தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட்கள், மின்னல் வேக ஸ்டம்பிங், சிறப்பான கேப்டன்சி மற்றும் இக்கட்டான சூழல்களையும் தனது நிதானமான அணுகுமுறையால் மறக்க முடியாத வெற்றிகளாக மாற்றிய விதம் ஆகியவற்றை சிஎஸ்கே ரசிகர்கள் இனி மைதானத்தில் காண முடியாமல் தவிப்பார்கள்.

எண்ணற்ற அழகான நினைவுகளையும், வியக்கத்தக்க தருணங்களையும் வழங்கியதற்கு தோனிக்கு நன்றி. தமிழகமும், குறிப்பாக சென்னையும், எப்போதும் உங்களைத் தனது இதயத்தில் தனியிடத்தில் வைத்திருக்கும். சிஎஸ்கே அணியின் வழிகாட்டி என்ற புதிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தோனியின் கிரிக்கெட் பயணத்தையும், சென்னை மற்றும் தமிழக மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் தலைவர்கள் தங்களது பதிவுகளில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.