‘அண்ணன் சீர்’ திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, ‘அண்ணன் சீர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 05.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் குடும்ப வருமானம் கொண்ட தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் தொடக்க ஒதுக்கீடாக 2026-27 நிதியாண்டில் ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை தமிழக அரசு நேரடியாகப் பயனாளிகளுக்கு வாங்கிக் கொடுக்காது. ஒப்பந்தப்புள்ளி (Tender) மூலம் நிறுவனங்களைத் தேர்வு செய்து மொத்தமாகக் கொள்முதல் செய்து, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.

தங்க நாணயம் எப்படி வாங்கப்படுகிறது?

  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் (916) தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்படும்.
  • BIS ஹால்மார்க் சான்றிதழ் கட்டாயம்.
  • நாணயத்தின் ஒரு பக்கத்தில் தமிழக அரசின் இலச்சினை பொறிக்கப்பட வேண்டும்.
  • திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் தங்க நாணய உற்பத்தி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.
  • கொள்முதல் விலை, இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) நிர்ணயிக்கும் அன்றைய விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

2026-27 நிதியாண்டில் சுமார் 60,000 தங்க நாணயங்களைக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பட்டுப்புடவை எப்படி வாங்கப்படுகிறது?

  • 100% தூய மல்பெரி பட்டால் தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவை வழங்கப்பட வேண்டும்.
  • சில்க் மார்க் மற்றும் கைத்தறி முத்திரை சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
  • புடவையின் நீளம் 5.50 மீட்டர், ரவிக்கைத் துணி 0.70 மீட்டர் & மொத்த நீளம் 6.20 மீட்டர்.
  • மொத்த எடை 430 கிராம்; அதில் 380 கிராம் பட்டு, 50 கிராம் ஜரிகை.

இதற்கும் திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

யார் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்?

  • சமூக நலத்துறை ஒப்பந்தப்புள்ளி மூலம் நிறுவனங்களைத் தேர்வு செய்யும்.
  • தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் தங்க நாணயம், பட்டுப்புடவைகளைத் தயாரித்து அல்லது கொள்முதல் செய்து அரசிடம் ஒப்படைக்கும்.
  • தங்க நாணயங்கள் மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அரசு குறிப்பிட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்படும்.
  • மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?

  • “திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
  • 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
  • அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

  • திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
  • திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பச் சரிபார்ப்பு மற்றும் அடுத்தகட்ட நடைமுறைகள்

  • விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும்.
  • தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
  • விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.
  • தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.