“மருத்துவக் கழகம், டாஸ்மாக் கிடங்குகளை சீரமைப்பதா?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

TNMSC தன் உபரி நிதியில் டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தக் கூடாது என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மக்கள் நலனுக்காக மருந்து கொள்முதல் செய்ய வேண்டிய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தை (TNMSC), டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்துவது விஜய்
தலைமையிலான தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டுகிறது. அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பே மோசமாக இருக்கும்போது, அம்பத்தூர், தஞ்சாவூர், திருமழிசை டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்க நவம்பர் 12-இல் TNMSC ஒப்பந்தப்புள்ளிகள் கோரியிருப்பது, அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் துறையையும் மருத்துவத் துறையுடன் இணைத்துவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கட்டடப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளப் பொதுப்பணித் துறை (PWD) உள்ளிட்ட அரசுத் துறைகள் இருக்கும் நிலையில், டாஸ்மாக் ஊதியம் வழங்கும் எனக் கூறி TNMSC-இன் பொறியியல் பிரிவைப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. ஏற்கெனவே ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ மூலம் விமர்சனத்திற்கு உள்ளான TNMSC-ஐ, தற்போது இதற்குப் பயன்படுத்துவது மருத்துவப் பணிகள் கழகத்தைப் பலவீனப்படுத்திச் சுகாதாரத் துறையின் செயல்பாட்டை மேலும் பாதிக்கும் எனத் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (TNMOA), சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் (DASE) போன்றவை எச்சரித்திருக்கின்றன.

TNMSC தன் உபரி நிதியில் மருந்து, உபகரணங்களை உற்பத்தி செய்து விலையைக் குறைப்பதிலும் மருத்துவமனைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர, டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தக் கூடாது. எனவே, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் உடனடியாக இந்த ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்து, பொதுப்பணித் துறை மூலம் அப்பணிகளை மேற்கொண்டு TNMSC-இன் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.