தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை. ஒன்றிய அரசு தாமாக முன்வந்து கூடுதலாக முயற்சிகள் எடுத்து பழங்கால நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை ஊழல் எதிர்ப்பு தமிழ்ப் போராளிகள் அமைப்பு தலைவரும் முன்னாள் மாவட்ட ஆட்சியருமான சகாயம் வருகை தந்தார். அவர் ஆதிச்சநல்லூரில் சி சைட் என அழைக்கப்படும் பகுதிகளைப் பார்வையிட்டார். ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு பொருட்கள், முதுமக்கள் தாழிகளைப் பார்வையிட்டு ஆய்வுகள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை விளக்குகின்ற ஆதிச்சநல்லூர் வரலாற்று அதிசயம், ஆச்சரியம். இந்த ஆய்வில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்ததற்கான எச்சம் ஏராளமாகக் கிடைத்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள், பல்வேறு வகையான உலோக கருவிகள் கிடைத்துள்ளன. நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளாகப் பழங்கால பொருட்கள் அமைந்துள்ளன.
மேலும் இந்த ஆய்வானது இன்னும் ஆழமாக விரிவாக நடத்தப்பட வேண்டும் எனவும், நாகரிக வரலாறு குறித்த கால நிர்ணயம் விரைவாகக் கண்டறியப்பட வேண்டும் எனவும் பேசினார். அதோடு வெளிநாடுகளில் உள்ள அகழாய்வு பொருட்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெருமை வாய்ந்த மாபெரும் நாகரிகம் பிற நாகரிகத்தோடு தொடர்பிலிருந்தார்களா வணிகம் செய்தார்களா என்பதனையும் கண்டறிய வேண்டும். தமிழகம் இந்திய ஒன்றியத்தினுடைய இன்றியமையாத பகுதி. தமிழர்களின் பெருமை என்பது நாட்டிற்கான பெருமை. தமிழகம் பிற பகுதிகள் என்று பார்ப்பதற்கு எதுவும் இல்லை. ஒன்றிய அரசே தாமாக முன்வந்து கூடுதலாக முயற்சிகள் எடுத்து பழங்கால நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் எனப் பேசினார்.