ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையம் ஜூன் மாதம் திறக்கப்பட்டது. அதில் பெறப்பட்ட 3.53 லட்சம் புகார்களில்
3.50 லட்சம் புகாருக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், உண்மையான மின்மிகை மாநிலம் தமிழ்நாடு இல்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான்கு மாதத்தில் பல்வேறு சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவு பெறும் எனவும் தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் கட்டணம் தொடர்பான விவரங்கள் கைபேசிக்கு தானாக வந்து விடும் என்றும் தெரிவித்தார். மழை மற்றும் புயல் காலத்தில் தடையில்லா மின்சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.







