ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசு

ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் முதல் பரிசு பெற்றதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கே.என்.நேரு குடியரசுத்தலைவரிடம் விருது பெற்றார்.   ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள…

ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் முதல் பரிசு பெற்றதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கே.என்.நேரு குடியரசுத்தலைவரிடம் விருது பெற்றார்.

 

ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முன்னெடுப்பிற்காக தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடமிருந்து தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விருதை பெற்றுக்கொண்டார்.

 

இதையடுத்து, மத்திய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை, அமைச்சர் கே.என்.நேரு சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55.79 லட்சம் வீடுகளுக்கு பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஒற்றைக் கிராமத் திட்டங்கள் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கி கூறினார்.


ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதால், சில பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது. ஜல்ஜீவன் திட்டத்தினை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில், 2,400 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களை சிறப்பாக பராமரித்து தானியங்கு முறையில் (Automation) இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீர் வழங்குவதற்கு, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைக்காலங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, அதனை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்புவதற்கு திட்டங்கள் செயல்படுத்த, 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.