ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதால் ஆதரவளிக்கிறேன் என செய்தியாளர் சந்திப்பில் தனியரசு தெரிவித்தார்.
கரூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மத்திய பாஜக மோடி அரசு பொறுப்பேற்றது முதல் வரலாறு காணாத அளவு பெட்ரோல், டீசல், சிலிண்டர், இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்களைக் காக்க மத்திய அரசு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் தனியரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். ஏற்கனவே அதிமுகவில் தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்-ஐ வஞ்சித்து ஒற்றை தலைமை கோட்பாட்டைக் கொண்டு வந்தார் எடப்பாடி.
தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன்.
மீண்டும் நான்கு பேரும் இணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தது போல, அதிமுக மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அதனால் அவருக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன்” என்று தனியரசு பேசினார்.







