நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி, இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல்மருத்துவ கவுன்சில் சட்டங்களில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த மாதம் 27 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷூ துலியா, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய்ரோஸ்கி, சிடி ரவிக்குமார் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வினை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தினால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்த விரிவான புள்ளி விவரங்களை குறிப்பிட்டிருந்தது.
-இரா.நம்பிராஜன்








