”முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய…

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களும், மற்றும் அரசுத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்காக, கல்விக்காக உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் முறையாக செயல்படுகின்றனவா, மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து  இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பருவமழைக்கு முன் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் எனவும், தேசிய அளவில் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.