வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா, கோ.வி.செழியன், விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்கள் : ”நானும் டெல்டாக்காரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டமன்றத்தில் விளக்கமளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு வேகமாக செயல்பட்டு உடனடியாக பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரிகளும் மத்திய அரசின் நிலக்கரித் துறையை தொடர்பு கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பேசியிருகின்றனர். தமிழ்நாடு அரசு ஒரு போதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.








