தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர், நடிகையாக மாதவன், ஜோதிகா தேர்வு!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கு வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.…

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கு வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (மார்ச் 6) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவுக்கு தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவில் பரிசு பெறும் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ஆர்.மாதவனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக ஜோதிகாவிற்கும், சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு ‘வை ராஜா வை’ திரைப்படத்திற்காக கௌதம் கார்த்திக்கும், சிறந்த நடிகை சிறப்புப் பரிசு ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்படவுள்ளது.

https://twitter.com/news7tamil/status/1764698331979354407

சிறந்த வில்லன் நடிகருக்கான விருது ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்காக அரவிந்த்சாமிக்கும், சிறந்த நகைச்சுவை நடிகர் விருது ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்திற்காக சிங்கம்புலிக்கும், சிறந்த நகைச்சுவை நடிகை விருது ‘திருட்டுக் கல்யாணம்’ மற்றும் ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக தேவதர்ஷினிக்கும், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ‘அபூர்வமகான்’ திரைப்படத்திற்காக தலைவாசல் விஜய்க்கும், சிறந்த குணச்சித்திர நடிகை விருது ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காக கௌதமிக்கும் வழங்கப்படவுள்ளது.

விருது வழங்கும் விழாவில், மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.