தேனி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உறுதியளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பிலவேந்திரன்-பாத்திமாமேரி தம்பதிக்கு நேற்று முன் தினம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்த பெண் குழந்தை, இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பெரியகுளத்தில் குழந்தையை அடக்கம் செய்யும்போது, குழந்தையின் கை, கால்கள் அசையவே, உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இதனிடையே, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாகக் கூறிய விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, பணியில் இருந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.







